ரூ.49 கோடியில் சங்கனூர் பள்ளம் சீரமைப்பு பணி தீவிரம்: சிறுவர் பூங்கா, மிதிவண்டி பாதை, சாலை வசதி அமைகிறது

கோவை:  கோவை சங்கனூர் பள்ளத்தை ரூ.49 கோடியில் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளத்தில் கரைப்பகுதியில் சிறுவர் பூங்கா, நடைபாதை, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட உள்ளன. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் மழைநீர் சங்கனூர் பள்ளம், தடாகம், கவுண்டம்பாளையம், ரத்தினபுரி, கணேஷ் புரம், புலியகுளம், சிங்காநல்லூர் குளம் அருகே சென்று பின்னர் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்னாள் சங்கனூர் பள்ளத்தில் சுத்தமான தண்ணீர் சென்றது. ஆனால் தற்போது கழிவுநீர் மட்டுமே செல்லும் பள்ளமாக உள்ளது. சங்கனூர் பள்ளத்தை சீரமைத்து தூய்மைப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் சங்கனூர் பள்ளத்தை சீரமைக்க ரூ.49 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் இருந்து பள்ளத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டப்படுவதுடன், நடைபாதை, சிறுவர் பூங்கா, சாலைகள் அமைக்கப்பட உள்ளன. தற்போது கோவை-மேட்டுப்பாளையம் சாலையை ஒட்டியுள்ள சங்கனூர் பள்ளத்தை தூர்வாரும் பணி நிறைவடைந்து, சுமார் 300 மீட்டர் தூர் வரை கரைகளின் இருபுறமும் கருங்கற்கள் கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சங்கனூர் பள்ளத்தை சீரமைத்து, அதன் கரைப்பகுதியில் இலகு ரக வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக இந்த ஓடையில் 2.3 கி.மீ. தூரத்திற்கு ஓடையை தூர்வாரி, கரையைப்பலப்படுத்தி சாலைகள் அமைக்கப்பட உள்ளன.கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போலீஸ் சோதனை புறக்காவல் நிலையம் அருகே தொடங்கி 2.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. மேலும் ஓடையின் இருபுறமும் கருங்கற்கள் கொண்டு தடுப்புச்சுவர் அமைக்கப்படும். இதன் மூலம் தண்ணீர் நிலத்திற்கு அடியில் செல்லும். மேலும் சிறுவர் பூங்காங்கள் அமைக்கப்பட உள்ளன. மிதிவண்டிகள், பொதுமக்கள் நடந்து செல்லவும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணி நிறைவு பெற்றால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார்கள், இதன் வழியாக செல்ல முடியும். கோவை-மேட்டுப்பாளையம் சாலை ஒட்டியுள்ள சங்கனூர் பள்ளத்தில் இருந்து ரயில்வே பாலம் வரை தற்போது கருங்கற்கள் மூலம் இருபுறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சங்கனூர் பள்ளம் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரு கோவில்களும் உள்ளன.

ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி விரைவில் துவங்கப்படும். அதன் பின்னர் மீதம் உள்ள சங்கனூர் பள்ளம் சீரமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு விரைவாக முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அன்மையில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சங்கனூர் பள்ளம் கோவையின் மிகவும் பழமை வாய்ந்த பகுதி ஆகும். மேற்குதொடர்ச்சி மழைநீர் இப்பகுதியில் செல்வதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சங்கனூர் பள்ளம் சீரமைக்கப்பட்டால் ரத்தினபுரி, சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு நடைபயிற்சி செல்வதற்கும், குழந்தைகள் பொழுதுபோக்கவும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே சங்கனூர் பள்ளம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க வேண்டும்’’என்றனர்.

வாலாங்குளம் உபரி நீர் செல்ல சுரங்கம்

கோவை மாநகரில் உள்ள வாலாங்குளம் பகுதியில் மழைக்காலங்களில் உபரி நீர் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. சுங்கம் பகுதியில் மழைநீர் தேங்கி சாலைகளில் செல்லும் நிலையும் உள்ளது. இதனை தடுக்க சுங்கம் முதல் சங்கனூர் பள்ளம் வரை சுரங்கம் அமைத்து மழைநீரை சங்கனூர் பள்ளத்திற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தவிர ஏற்கனவே சங்கனூர் பள்ளத்திற்கு செல்லும் கால்வாய்களும் தூர்வாரப்பட உள்ளன. இதன் மூலம் சங்கனூர் பள்ளத்தில் மழைநீர் அதிக அளவில் செல்லும் வாய்ப்புள்ளது. அதே போல் சங்கனூர் பள்ளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Related Stories: