நாய் கடித்து பூனை இறந்ததால் ஆட்டோ டிரைவருக்கு சரமாரியாக வெட்டு

சென்னை: ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி, கோகுலம் காலனி விரிவு, கிருஷ்ணன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மனோகரன் (55). இவரது வீட்டில் பூனை வளர்த்து வந்தார். பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு ஆட்டோ டிரைவர் சங்கர் (37). இவர், நாயை வளர்த்து வந்தார். கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சங்கரின் நாய், மனோகரனின் பூனையை கடித்து குதறியதால் பூனை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், தான் செல்லமாக வளர்த்த பூனை இறந்துவிட்டதே என்று கடந்த 10 நாட்களாக குடித்துவிட்டு சங்கரை தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மனோகரன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு சங்கரை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சங்கர், கத்தியை எடுத்து மனோகரனின் தலை மற்றும் இடதுபுற கழுத்து, மார்பு போன்ற பகுதியில் வெட்டியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து அவரை மீட்டனர். படுகாயம் அடைந்த மனோகரனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: