நகைக்கடன் வங்கி கொள்ளை குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது

* 3 நாட்கள் 6 கிலோ தங்க நகைகளை வீட்டில் வைத்திருந்தார்

* நகைகளை உருக்க மிஷின் வாங்கியது விசாரணையில் அம்பலம்

சென்னை: அரும்பாக்கம் நகை கடன் வங்கி கொள்ளையில் குற்றவாளியிடம் இருந்து 6 கிலோ தங்க நகைகளை வாங்கி 3 நாட்கள் தனது வீட்டில் வைத்திருந்த அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் அமல்ராஜை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நகை கடன் வங்கியில் பட்டப்பகலில் கத்தியை காட்டி  மிரட்டி வங்கி மேலாளர் மற்றும் பெண் ஊழியர் வாட்ச்மேன் ஆகிய 3 பேரையும் கை,  கால்களை கட்டிப்போட்டு 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில், கொள்ளையடிக்கப்பட்ட வங்கியின் மற்றொரு வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த முருகன் மற்றும் அவரது பள்ளி நண்பர்களான சூர்யா, பாலாஜி, சந்தோஷ், செந்தில் ஆகியோர் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தனிப்படையினர் சந்தோஷ், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகன், சூர்யா, செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு மீதமுள்ள நகைகள் என 31.7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு குறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கூடுதல் கமிஷனர் அன்பு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சந்தோஷிடம் பறிமுதல் செய்த 18 கிலோ தங்க நகைகளும் வங்கியால் சீல் வைக்கப்பட்ட கவரில் இருந்தது. இந்த சீல்  வைக்கப்பட்ட கவர்களை கிழித்து பார்த்த பிறகு தான் 2.1 கிலோ தங்கம் குறைந்தது தெரியவந்தது. பிறகு அனைவரிடமிருந்தும் அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்தோம். இதில் சந்தோஷ் தான் அதிக நகைகள் கொண்டு சென்றவர்.  அவருடைய உறவினர் அமல்ராஜ் அச்சிறுப்பாக்கத்தில் இன்ஸ்பெக்டராக உள்ளார். வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட மறுநாள் குற்றவாளி சந்தோஷ், மேல்மருவத்தூரில்  உள்ள இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் கையில் கொண்டு சென்ற தங்க நகைகளின் ஒரு பாதியை அவரிடம் கொடுத்துவிட்டு வந்துள்ளார். பிறகு இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் இருந்து மீதமுள்ள 6 கிலோ 246 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தோம்.

கொள்ளையடித்த நகைகளில் ஒரு பாதியை சந்தோஷ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜிடம் கொடுத்து வந்த பிறகு, அந்த நகைகளை 3 நாட்கள் அமல்ராஜ் தனது வீட்டில் வைத்திருந்துள்ளார். இது அரும்பாக்கம் வங்கியில்  கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று அமல்ராஜிக்கு நன்றாக தெரியும். அதனால்தான், நாங்கள் அவர் மீது அறிக்கை அனுப்பி இருந்தோம். அதன்படி காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

3 நாட்கள் நகைகளை வீட்டில் வைத்திருந்த குற்றத்திற்காக இன்ஸ்பெக்டர் அமல்ராஜை கைது செய்து இருக்கிறோம். அமல்ராஜ் இதுவரை எந்த குற்றங்களிலும் ஈடுபட்டதாக அவரது சர்வீஸ் ரெக்கார்டில் இல்லை. சந்தோஷ் மனைவியும் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மனைவியும் உறவினர்கள். அதனால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அமல்ராஜிடம் சென்று இருக்க கூடும் என்ற அடிப்படையில் அமல்ராஜை அழைத்து விசாரணை நடத்தினோம். அப்போதுதான் நகைகள் அவரிடம் இருந்தது தெரியவந்தது. குற்றவாளிகள் நகைகளை உருக்க தனியாக இயந்திரம் ஒன்று வாங்கியுள்ளனர். அந்த இயந்திரத்தை வாங்குவதற்கு ஸ்ரீவஸ்தவாவை பயன்படுத்தியுள்ளனர்.

அந்த இயந்திரத்தை ஒரு மார்க்கெட்டில் ஸ்ரீவஸ்தவா வாங்க செந்தில்தான் ஏற்பாடு செய்துள்ளார். பிறகு திட்டமிட்டப்படி வங்கியில் நகைகளை கொள்ளையடித்து விட்டு 2 பைக்கில் சென்ற அவர்கள் பின்னர் காரில் நகைகளுடன்  குரோம்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜிக்கு சென்றுள்ளனர். மேலும், குரோம்பேட்டையில் சந்தோஷ் உறவினர்கள் வீட்டில் 2.656 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான முருகன் மற்றும் சந்தோஷ் தான் மூளையாக இருந்துள்ளனர். இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் மனைவிக்கு இந்த வழக்கில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு கூடுதல் கமிஷனர் அன்பு தெரிவித்தார்.

* மொத்த நகைகளும் பறிமுதல்

அரும்பாக்கம் வங்கியில் நகை கொள்ளை வழக்கில் எல்லா விதமான நடவடிக்கையும் மேற்கொண்டு முழு மூச்சாக சென்னை காவல் துறை செயல்பட்டு இந்த பணியை முடித்து இருக்கிறோம். இதுதொடர்பாக, இன்னும் வேறு யாருக்கேனும்  தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகிறோம். இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு மொத்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என கூடுதல் கமிஷனர் அன்பு தெரிவித்தார்.

* நகையை உருக்கும்போது புகை வந்ததால் ஓட்டம்

குரோம்பேட்டையில் உள்ள ஒரு லாட்ஜில் கொள்ளையடித்த நகைகளை புதிதாக வாங்கிய இயந்திரத்தை பயன்படுத்தி கொள்ளையர்கள் உருக்க முயற்சி செய்துள்ளனர். நகைகளை உருக்குவதற்காக தனியாக ஒரு நபரையும் இவர்கள்  அழைத்து சென்றுள்ளனர். அவரை நாங்கள் தேடி வருகிறோம். நகைகளை உருக்க முயற்சி செய்த போது அவர்கள் வாங்கி வந்த இயந்திரம் சிறியது என்பதால் அவ்வளவு நகைகளை அவர்களால் உருக்க முடியவில்லை. அதேநேரம் நகைகளை உருக்கும் போது அதிகளவில் புகை வெளியேறியதால் லாட்ஜில் உள்ளவர்கள் சந்தேகப்பட்டு விடுவார்கள் என்று அச்சமடைந்து, உடனே லாட்ஜை காலி செய்து ஒவ்வொருவரும் தனித்தனி திசைக்கு தப்பி சென்றதாகவும் கூடுதல் கமிஷனர் அன்பு கூறினார்.

Related Stories: