தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்து ஆலோசனை; மாநில காவல் துறைக்கு 5ஜி தொழில்நுட்பம்: டிஜிபிக்கள் மாநாட்டில் அமித் ஷா தகவல்

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு உத்திகள் குறித்த மாநாட்டில் மாநில காவல்துறை 5ஜி தொழில்நுட்பத்தை மாநில காவல்துறை திறன்பட பயன்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமிஷ் வலியுறுத்தினார். டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘அனைத்து மாநிலங்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மக்கள்தொகை மாற்றங்களை எல்லை மாநிலங்களின் டிஜிபிகள் கண்காணிக்க வேண்டும். மாநில, மாவட்ட எல்லைகளில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு, வடகிழக்கில் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. போதை பொருளை கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அதன் வலையமைப்பை முற்றிலுமாக அகற்ற வேண்டும். மாநில காவல்துறையின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 5ஜி தொழில்நுட்பத்தை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். உளவுத்துறையில் நவீன முறைகளை கையாள வேண்டும். தொழில்நுட்பத்துடன், மனித நுண்ணறிவைப் பயன்படுத்தவும் வேண்டும்’ என்றார். இரண்டு நாள் நடந்த இந்த மாநாட்டில், சுமார் 600 அதிகாரிகள் பங்கேற்றனர்.

தீவிரவாத எதிர்ப்பு, மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு படை, கிரிப்டோகரன்சி, ட்ரோன் தொழில்நுட்பம், இணையம் மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு, தீவுகள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் 5ஜி தொழில்நுட்பம், மக்கள்தொகை மாற்றங்கள், எல்லைப் பகுதிகளில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: