வன்னியர் சங்க நிர்வாகி கொலை வழக்கில் 13 பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கொத்தத்தெருவை சேர்ந்தவர் கண்ணன்(31). ஆம்புலன்ஸ் வைத்துள்ளார். வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளரான இவருக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளர் கதிரவன் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. இதில் கண்ணன், கதிரவனை தாக்கியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் இருந்ததால் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் இருந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன் விடுதலையாகி மயிலாடுதுறைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிய பேருந்து நிலையம் அருகில் முன்விரோதம் காரணமாக கண்ணனை 22 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கதிரவன்(39), பிரபாகரன்(52), இவரது சகோதரன் துரைக்கண்ணு(48), சேது(24), சந்தோஷ்(17), முருகவேல்(37), கார்த்தி(31), ரஞ்சித்(19), ஹரிஷ்(20), அஜித்(24), பிரிதிவிராஜ்(32), குணசேகர்(22), நாத்(20) உட்பட 13 பேரை கைது செய்தனர்.

இவர்களில் ஒருவர் சிறுவன் (17) என்பதால் அவரை தவிர மீதமுள்ள 12 பேரையும் மயிலாடுதுறையில் உள்ள நீதிபதி கலைவாணி வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தி நாகை சிறையில் அடைத்தனர்.  சிறுவனை இன்று நீதிபதி முன் போலீசார் ஆஜர்படுத்துகின்றனர். கைதான துரைக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர். இவரது சகோதரர் பிரபாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நகர செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: