சிறுவாபுரி முருகன் கோயிலில் 6 கால யாக பூஜைகள் துவக்கம்

பெரியபாளையம்: சிறுவாபுரி முருகன் கோயிலில் நாளை மறுநாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முதல் கால யாகபூஜைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 6 வாரங்கள் செவ்வாய்தோறும் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இக்கோயிலில் கடந்த 2003ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதைத் தொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரூ.1 கோடி மதிப்பில் ஆலய புனரமைப்பு பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், சிறுவாபுரி முருகன் கோயிலில் வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன் கோயில் வளாகத்தில் கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. பின்னர் நேற்று முதல் கால யாகபூஜை துவங்கி, தொடர்ந்து 6 கால யாகபூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம் உள்பட கோயில் வளாகம் முழுவதிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. ஆலய நுழைவுவாயிலில் வாழைமர தோரணங்கள் கட்டப்பட்டு, அப்பகுதி மக்கள் திரளாக வந்து யாக பூஜைகளில் பங்கேற்று வருகின்றனர். அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அமைக்கப்பட்ட சாலை மற்றும் முக்கிய பிரமுகர்களின் கார்கள் நிறுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களில் நடைபெறும் பணிகளை மாவட்ட எஸ்பி செபாஸ் கல்யாண், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகரன், பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாரதி, கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார் கோயில் ஸ்தபதி நடராஜன் உள்பட பல்வேறு அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Related Stories: