68 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பவானிசாகர் அணை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டத்தில் பவானிசாகர் அணை அமைந்துள்ளது. இந்த அணை இந்தியா சுதந்திரம் பெற்ற பின் அப்போதைய பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான ஒன்றிய அரசு முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் அணைகள் கட்டுவதற்கு முக்கியத்துவம் அளித்தது. முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் பவானிசாகர் அணை கட்ட ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1948ம் ஆண்டு பவானி ஆறும் மாயாறும் கலக்குமிடத்தில் ரூ.10.50 கோடி செலவில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது.

தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப்பணி 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ம் தேதி நிறைவு பெற்றது.

அன்றைய தினம் அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் காமராஜர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பாசனப்பரப்பு கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மூலம் கீழ்பவானி பிரதான வாய்க்காலில் ஈரோடு, திருப்பூர் மற்றும் கருர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதுதவிர பவானி ஆற்றுப்பாசனத்தில் தடப்பள்ளி வாய்க்கால் மூலம்  17 ஆயிரத்து 654 ஏக்கர் நிலங்களும், அரக்கன் கோட்டை வாய்க்கால் மூலம் 6 ஆயிரத்து 850 ஏக்கர் நிலங்களும், காளிங்கராயன் வாய்க்கால் முலம் 17 ஆயிரத்து 776 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. அணையின் முழு கொள்ளளவான 32.8 டிஎம்சி வரை நீரை தேக்கி வைக்கும் திறன் கொண்ட இந்த அணையின் கரையின் நீளம் சுமார் 8.78 கிமீ அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சேறு கழித்து 105 அடி வரை நீர் தேக்கப்படுவதால் 105 அடி என கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

அணையின் முழுத் தேக்க நீர்ப்பரப்பு 30 சதுர மைல்கள்.  தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையையும் இந்த அணை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கீழ்பவானி பிரதானக் கால்வாயின் நீளம் 200 கிமீ ஆகும். பிரதான கால்வாயிலிருந்து 800 கிமீ நீளத்திற்கு கிளை வாய்க்கால்களும், 1900 கிமீ நீளத்திற்கு பகிர்மான வாய்க்கால்களும் வெட்டப்பட்டுள்ளன. அணையில் ஆற்று மதகுகள் 9ம் கீழ்பவானி வாய்க்கால் மதகுகள் 3ம் நீர் வழிந்தோடி மதகுகள் 9 என மொத்தம் 19 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது.

 இதில் பவானி ஆற்றின் மதகுகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும் என மொத்தம் 16 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த இந்த அணையின் கட்டுமான பணி நடைபெற்ற போது 1953ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியும் கட்டுமான பணியை நேரில் பார்வையிட்டுள்ளனர். 1950களிலேயே மிக உயரிய தொழில்நுட்பமுள்ள இயந்திரங்களை அணை கட்டுமான பணிக்கு பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு தேவையான  இயந்திரங்கள் இலண்டனிலிருந்து வரவழைக்கப்பட்டது என அணை கட்டுமானப்பணிக்கு சென்ற இப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் கூறுகின்றனர்.  முற்றிலும் மண்ணிணாலான இந்த அணையானது 67 ஆண்டுகளைக் கடந்தும் சிறிதுகூட விரிசல் ஏற்படாமல் உறுதித்தன்மை வாய்ந்த அணையாக உள்ளது. இந்த அணை கட்டப்பட்டதால் தரிசு நிலங்கள் நஞ்சை நிலங்களாக மாறின. லட்சக்கணக்காண விவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை குடிநீர் வழங்க ஏதுவானது.  நாடு போற்றும் இந்த அணை இன்றுடன் 67 ஆண்டுகளை கடந்து 68ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

5 முறை நிரம்பி வழிந்தது

பவானிசாகர் அணை கட்டி முடிக்கப்பட்டு 67 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் இதுவரை 30 முறை அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. 22 முறை 102 அடியை தொட்டுள்ளது. 5 முறை அணை தனது முழு கொள்ளளவான 105 அடி எட்டியுள்ளது. இதில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை தொடர்ச்சியாக 5 ஆண்டுகளும் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அணை முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது.

அணையால் உருவான பவானிசாகர் நகரம்

பவானிசாகர் அணை கட்டப்பட்டதால் அணை முன்புறம் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகம், முகாம் அலுவலகம் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டதோடு பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி நிலையம், மண்டல ஊரக வளர்ச்சி நிறுவனம், மீன்வளத்துறை, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழே இயங்கும் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் பவானிசாகரில் அமைந்துள்ளதால் இன்று வரை பவானிசாகர் நகரம் அரசு அலுவலகங்களின் மையமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: