ஆபாசமாக உடை அணிந்தால் பாலியல் சீண்டல்கள் நடக்கும்; கேரள நீதிபதி தீர்ப்பால் சர்ச்சை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கோழிக்கோட்டை சேர்ந்தவர் சிவிக் சந்திரன் (74). பிரபல எழுத்தாளரான இவர், மலையாளத்தில் ஏராளமான கவிதை புத்தகங்கள் உட்பட பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.இந்நிலையில், கோழிக்கோடு கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது சிவிக் சந்திரன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் எழுத்தாளர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக கோழிக்கோடு போலீசார் சிவிக் சந்திரன் மீது வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சிவிக் சந்திரன் கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில்,‘புகார்தாரர் மிகவும் ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் உடை அணிந்து நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகார்தாரரின் ஆபாசப் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக உடையணிவது பாலியல் சீண்டலுக்கு காரணமாக அமையும். 74 வயதான உடல் ஊனமுற்ற ஒருவர், கட்டாயப்படுத்தி தன்னுடைய மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்பதை நம்ப முடியவில்லை. எனவே, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது,’என்று கூறியுள்ளார்.  நீதிபதியின் இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உயுள்ளது. நீதிபதியின் இந்த கருத்து தனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக பெண் எழுத்தாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், கேரள மகளிர் ஆணையம் உள்பட பல்வேறு அமைப்புகள் நீதிபதியின் இந்தக் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Related Stories: