ராஜிவ்காந்தி சாலையில்செயலிழந்த மூன்றாவது கண்: குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பு

துரைப்பாக்கம்: ராஜிவ்காந்தி சாலையில் செயலிழந்து பயன்பாடில்லாமல் உள்ள மூன்றாவது கண் எனப்படும் சிசிடிவி கேமராக்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருவான்மியூர், நீலாங்கரை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட கண்ணகி நகர், கானத்தூர், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதான சாலைகளில் போலீசார் குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்ற சம்பவங்கள் ஏற்பட்டால் குற்றவாளிகளை எளிதில் கண்டறியவும் ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்களிப்புடன் பொருத்தப்பட்டது.

இப்படி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டதால் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மூன்றாவது கண் இருப்பதை பார்த்து குற்றச்செயல்களில் ஈடுபட பயந்து கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர். மேலும் பொதுமக்கள் பயமின்றி அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். குறிப்பாக பெண்கள் தன்னுடன் ஒருவர் துணைக்கு வருவதாக கருதி பயமின்றி தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உடைந்தும் சில இடங்களில் இல்லாமலும் இரும்பு பைப் மட்டும் காட்சியளிக்கிறது. மேலும் சில இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இரும்பு பைப்புகளுடன் சாலையோரம் வீசப்பட்டும் சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் திருடும் போயுள்ளன. இதனால் சமூக விரோதிகள் மீண்டும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக ராஜிவ் காந்தி சாலையில் உள்ள நடை மேம்பாலம், பள்ளிகள், கல்லூரிகள், பஸ் நிறுத்தங்களில் எந்த வித பயமின்றி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். மேலும் இச்சாலையில் ஏதேனும் விபத்து ஏற்படுத்தி விட்டு செல்லும் வாகனங்களை போலீசார் கண்டறிய முடியாத சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட காவல்துறை துறையினர் மறுபடியும் புதிதாக பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி முறையாக பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பயமின்றி நடக்கும் குற்றச்சம்பவங்கள்

பொதுமக்கள் கூறுகையில், `எங்கள் பகுதிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு நலச்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனால் குற்றச்குற்றங்கள் குறைய தொடங்கியது. கண்காணிப்பு கேமராக்கள் உடைந்தும் செயலிழந்து உள்ளதால் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் எந்த பயமின்றி குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

காவல்துறையினர் ராஜிவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் திருட்டு, விபத்து, கஞ்சா, கருப்பு பூனை, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் தடுக்கும் வகையில் மீண்டும் இப்பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமராவை பொருத்தி மக்கள் எவ்வித அச்சமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: