ஐகோர்ட் கிளையில் மனு தள்ளுபடி துப்பாக்கி வைக்கும் உரிமத்தை உரிமையாக கேட்க முடியாது

மதுரை: துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை உரிமையாக கேட்க முடியாது எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மனுவை தள்ளுபடி செய்தது. நெல்லையைச் சேர்ந்த மனோகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கான்ட்ராக்டராக உள்ளேன். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விவசாய நிலங்கள் உள்ளன. இதனால், விலங்குகள் தொல்லை உள்ளது. எனவே, எனக்கு துப்பாக்கி உரிமம் கேட்டு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதை ரத்து செய்து எனக்கு துப்பாக்கி உரிமம் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.விஜயகுமார், ‘‘நெல்லை மாவட்டத்தில் சமூகரீதியாக பிரச்னை இருப்பதால், பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் தந்தை ஏற்கனவே துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளார். இருவரும் ஒரே குடும்பம் தான். எனவே, மனுதாரருக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமத்தை உரிமையாக கோர முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: