முடிச்சூர், திரிசூலம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்; எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தாம்பரம்: புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட முடிச்சூர் முதல் நிலை ஊராட்சியில், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நேற்று  கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிந்துலேகா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், முடிச்சூர் ஊராட்சியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஸ்ரீ பல்லாவரம்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திரிசூலம் ஊராட்சி பகுதியில் 75வது சுதந்திர  தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதற்கு, பல்லாவரம்  எம்எல்ஏ இ.கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில் கழிவுநீர்  கால்வாய், சாலை, தண்ணீர் வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள்  மனுக்களாக வழங்கினர். கூட்டத்தில் எம்எல்ஏ இ.கருணாநிதி பேசுகையில்,‘‘திரிசூலம்  பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான புதிய தெருவிளக்குகள் போடப்படும், தினந்தோறும் ஐந்து லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆறு மாதத்திற்குள் வழங்கப்படும்.’’என உறுதி அளித்தார். நிகழ்ச்சியில், திரிசூலம் ஊராட்சி மன்ற தலைவர் உஷா மாரிமுத்து, துணைத்தலைவர் அந்தோணி, ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்  மாரிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.

Related Stories: