சமீர் வான்கடேயின் சாதி விவகாரம்; சிறையில் உள்ள மாஜி அமைச்சர் மீது எஸ்சி-எஸ்டி பிரிவின்கீழ் வழக்கு.! மகாராஷ்டிரா போலீஸ் நடவடிக்கை

மும்பை: போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீதான விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள மாஜி அமைச்சர் நவாப் மாலிக் மீது எஸ்சி-எஸ்டி பிரிவின்படி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை கடற்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த சொகுசு கப்பலில் போதைப்பொருட்களுடன் கூடிய விருந்து நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு (என்சிபி) அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே தலைமையிலான குழு அதிரடி ரெய்டு நடத்தியது. அப்போது பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவ்விவகாரத்தில் ஆர்யன் கானை கைது செய்வதை தவிர்க்க லட்சக்கணக்கில் சமீர் வான்கடே பேரம் பேசியதாக புகார் எழுந்தது. அதையடுத்து மும்பை போதை பொருள் தடுப்பு தலைமையகத்துக்கு சமீர் வான்கடே மாற்றப்பட்டார்.

இதனிடையே, போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இருந்து ஆர்யன் கானை நீதிமன்றம் விடுவித்தது. முன்னதாக சமீர் வான்கடேவின் சாதி சான்றிதழ் போலி என்று அப்போதைய மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் பரபரப்பு புகார் அளித்தார். அதையடுத்து, ஜாதி ஒழிப்புக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அந்த குழுவின் விசாரணை முடிவுற்ற நிலையில், சமீர் வான்கடே சமர்பித்த சாதி சான்றிதழ் பொய்யானது அல்ல என்று அந்த குழு அறிவித்தது. இந்நிலையில், கோரேகான் காவல் நிலையத்தில் சமீர் வான்கடே தரப்பில், தற்போது பணமோசடி வழக்கில் சிறையில் உள்ள நவாப் மாலிக் மீது அவதூறு புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நவாப் மாலிக் மீது அவதூறு குற்றச்சாட்டுகள் மற்றும் எஸ்சி-எஸ்டி சட்டப் பிரிவின்படி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு மேலும் சிக்கல் அதிகரித்துள்ளது.

Related Stories: