திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் பெட்ரோல் குண்டுவீச்சு: போலீஸ் வாகனம் மீது தாக்குதல்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் மாட்டுத் தொழுவம் தீக்கிரையானது. போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கியதில் பெண் எஸ்ஐ, ஏட்டு படுகாயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கரம்பவிளை சந்தனமாரியம்மன் கோயிலில் கடந்த 10ம் தேதி கொடை விழா துவங்கியதையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில் இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் போலீசார் சமரசப்படுத்தினர்.

இந்நிலையில் வேலவன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஒருதரப்பைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஆறுமுகம் என்பவரது  மாட்டுத் தொழுவத்தில் பற்றிய தீ மளமளவெனப் பரவியது. தகவலறிந்து வந்த திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மேலும் தீ பரவாமல் தடுத்து

அணைத்தனர்.

 இதையடுத்து எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர்கள் போலீசார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியதோடு, போலீஸ் வாகனத்தையும் அடித்து நொறுக்கினர். இதில் பெண் எஸ்ஐ, ஏட்டு ஆகியோர்  படுகாயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்த  விசாரணை நடத்திய  திருச்செந்தூர் திருக்கோயில் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.

Related Stories: