ருஷ்டிக்கு வைக்கப்பட்ட வென்டிலேட்டர் நீக்கம்

நியூயார்க்: கத்திக்குத்தில் படுகாயமடைந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டது. சாத்தானின் கவிதைகள் என்ற புத்தகத்தை எழுதி பல ஆண்டுகளாக மரண தண்டனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க்கில்  நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ஹதி மட்டார் (24) என்ற வாலிபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தினான். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது.

கத்திக்குத்தில் நரம்புகள் துண்டானதால் அவருடைய ஒரு கண்ணில் பார்வை பறிபோகும், பேசும் திறனை இழப்பார் என கூறப்பட்டது. அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் நேற்று அகற்றப்பட்டது. அவர் பேசுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட  ஹாதி மட்டாரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது குற்றத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த அவன், கொலை செய்யும் நோக்கத்தில் அங்கு வரவில்லை என்று கூறினான்.

Related Stories: