முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு பள்ளி முன்பு கிடக்கும் ராட்சத மரத்துண்டுகள்: அப்புறப்படுத்த கோரிக்கை

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசு நடுநிலைப்பள்ளி முகப்பு சுவர் அருகே கஜாபுயலில் விழுந்த மரங்களை ஏலம் எடுத்தவர் மரங்களை வெட்டிவிட்டு அடிப்பக்க துண்டுகளை போட்டுவிட்டு சென்றதை உடனடியாக அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளி முகப்பு சுவர் அருகே கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலின்போது விழுந்த மரங்களின் அடிப்பகுதி துண்டுகள் அப்பகுதியில் இன்னும் அப்புறப்படுத்தாமல் இருக்கிறது.

புயலின்போது விழுந்த மரங்களை ஏலம் எடுத்தவர் துண்டுபோட்டு எடுத்து சென்ற நிலையில் இதனை மட்டும் ஏன் அப்படியே விட்டு சென்றார் என்று தெரியவில்லை. இதனால் இங்கு படிக்கும் மாணவர்கள் பள்ளி துவங்கும்போதும் விடும்போதும் இந்த மரத்துண்டுகள் மீது ஏற்றி நிற்பது, உட்கார்ந்து இருப்பது, விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகினர். அதேபோன்று அப்பகுதியில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கும் இங்கு வந்து விளையாடி வருகின்றனர். நீண்டகாலமாக இங்கு மரத்துண்டுகள் கிடக்கும் பகுதி பராமரிப்பு இன்றி இருப்பதால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் ஊர்ந்து செல்கிறது. இதனால் இங்கு நடமாடுபவர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு எடையூர் அரசு நடுநிலைப் பள்ளி எதிரே கிடக்கும் மரத்துண்டுகளை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: