களைகட்டும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம்!: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு..பொதுமக்கள் இலவசமாக காணலாம்..!!

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே சென்னை கோட்டை கொத்தளம் எதிரே காலாட்படை, காமண்டோ படை, பெண்கள் படை உள்பட காவல்துறையின் 7 படைகளின் அணிவகுப்பு மற்றும் உதிரிப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகை இரண்டாம் நாளாக இன்றும் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு கிராமிய கலைகள் வளர்ச்சி மையத்துடன் இணைந்து நிகழ்ச்சிகளை நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. 4 நாட்களுக்கு 4 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடக்கும். அதன்படி, ஆகஸ்ட் 12ல் சென்ட்ரல், 13ல் விம்கோ நகர், 14ல் கிண்டி கத்திப்பாரா, 15ல் அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கலை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய நடனமான கரகாட்டம், காவடியாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனை மக்கள் இலவசமாக காணலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Related Stories: