வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் 8 பேரூராட்சிகளில் பழுதடைந்த சுகாதார வளாகம் புதுப்பிக்க 40 லட்சம் நிதி ஒதுக்கீடு: அதிகாரிகள் தகவல்

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள 8 பேரூராட்சிகளில் பழுதடைந்த 8 சுகாதார வளாகத்தை புதுப்பிக்க ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் போதிய பாராமரிப்பின்றி சுகாதார வளாகக் கட்டடம் நாளுக்கு நாள் வீணாகி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் பழுதடைந்த நிலையில் காணப்படும் சுகாதார வளாகத்தை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து, பழுதடைந்த சுகாதார வளாகம் கணக்கெடுப்பு பணிகள் நடந்தது. வேலூர் பேரூராட்சி மண்டலத்தில் 8 சுகாதார வளாகம் புதுப்பிக்க அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதன்படி, வேலூர் மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருப்பத்தூர் மாவட்டத்தில் உதயேந்திரம், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை, காவேரிப்பாக்கம், நெமிலி, திமிரி, பனப்பாக்கம், தக்கோலம், விளாப்பாக்கம், அம்மூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், களம்பூர், சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கலம், வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், புதுப்பாளையம், பெரணமல்லூர், தேசூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. இதில் 8 பேரூராட்சிகளில் பழுதடைந்த 8 சுகாதார வளாகத்தை புதுப்பிக்க ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வேலூர் பேரூராட்சி மண்டலத்தில் உள்ள வேலூரில் பள்ளிகொண்டா, திருவலம், ராணிப்பேட்டையில் கலவை, அம்மூர், தக்கோலம், திருப்பத்தூரில் நாட்றம்பள்ளி, திருவண்ணாமலையில் செங்கம், களம்பூர் ஆகிய 8 பேரூராட்சிகளில் 15வது நிதி குழு சார்பில் பொது சுகாதார வளாகத்தை புதுப்பிக்க ₹40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் பள்ளிகொண்டா, தக்கோலம் ஆகிய பேரூராட்சிகள் சுகாதார வளாகம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. புதுப்பிக்கப்படும் சுகாதார வளாகத்தில் குளியலறை, கழிவறை, நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றுடன் நவீன வசதிகளுடன், சுகாதார வளாகத்தின் வெளியே பூங்கா போன்ற தோற்றத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் காவேரிப்பாக்கம், விளாப்பாக்கம் பேரூராட்சிகளில் புதிதாக பொது சுகாதார வளாகம் கட்டுவதற்கு 12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினர்.

Related Stories: