நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் பயிற்சிக்காக குவியும் இளைஞர்கள்: அக்னிபாத் திட்டத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் ஏற்பாடுகள் தீவிரம்

நாகர்கோவில்: நாகர்கோவில் ஸ்டேடியத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் நடக்க உள்ள  நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. வெளி மாவட்ட இளைஞர்கள் நேரில் வந்து ஸ்டேடியத்தை பார்வையிட்டு பயிற்சி செய்து வருகிறார்கள். நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் அக்னிபாத் திட்டத்தின் கீழ்  ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி முதல் செப்டம்பர் 1-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல் உள்பட 16  மாவட்டங்களில் இருந்து விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்கிறார்கள். விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து அவர்களுக்கு அழைப்புக்கான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அண்ணா ஸ்டேடியத்தில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்புக்கான ஏற்பாடுகள் முழு வீச்சி நடந்து வருகின்றன. இது தொடர்பான ஆய்வு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன், திருச்சி ராணுவ முகாம் கர்னல் தீபக்குமார் தலைமையில் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நடந்தது.

நாகர்கோவில் ஆர்டிஓ சேதுராமலிங்கம், தாசில்தார் சேகர் மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஆள் சேர்ப்பு முகாமுக்கு வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர். தற்போது அண்ணா ஸ்டேடியத்தில் போதிய மின் விளக்கு வசதிகள் உள்ளிட்டவை செய்யும் ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

 இந்த நிலையில் நாகர்கோவிலில் உள்ள அண்ணா ஸ்டேடியத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் வந்து பார்வையிட்டு சென்ற வண்ணம் உள்ளனர். நெல்லை, தென்காசி,  தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக இளைஞர்கள் வந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். காலை மற்றும் மாலை இரு வேளையிலும் இளைஞர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். குமரி மாவட்ட இளைஞர்களும் வந்து பயிற்சி மேற்கொள்கிறார்கள். இதனால் அண்ணா ஸ்டேடியம் இளைஞர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.

இது குறித்து வெளி மாவட்ட இளைஞர்கள் கூறுகையில், நாகர்கோவிலில் அக்னிபாத் திட்டத்துக்கு ஆட்கள் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளோம். தேர்வு நடைபெறும் ஸ்டேடியம் எங்கு அமைந்துள்ளது என்பதை பார்வையிட வந்தோம். சிறிது நேரம் ஓட்ட பயிற்சியும் செய்தோம். அப்போது தான் தேர்வு அன்று புதிய இடம் என்ற மனப்பான்மை வராது. ஏற்கனவே ஓடி பழகிய மைதானம் என்ற எண்ணத்துடன், தைரியமாக ஓட முடியும் என்றனர்.

Related Stories: