மன்னார்குடி அருகே விவசாயம் செழிக்க வேண்டி நடவு திருவிழா-கடவுள் வேடமிட்ட சிறுவன், சிறுமி நாற்று நட்டனர்

மன்னார்குடி : விவசாயம் செழிக்க வேண்டி திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அடுத்த திருநாட்டியத்தான்குடியில் இறைவன், இறைவி ஆகியோர் வயலில் இறங்கி நாற்றுகளை நடவு செய்ததாக ஐதீகம் உள்ளது. இதையொட்டி திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அடுத்த திருநாட்டியத்தான்குடி மாணிக்க வண்ணர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடவு திருவிழா நடந்து வருகிறது. அதன்படி நேற்று மாணிக்க வண்ணர் கோயிலில் நடவு திருவிழா நடந்தது.

இதையொட்டி ரிஷப வாகனத்தில் மாணிக்க வண்ணர், தாமரை பூ வாகனத்தில் மங்கலாம்பிகை அம்மன், எலி வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியர், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளினர். நாற்று கட்டுகள் எடுத்து வரப்பட்டு மங்களாம்பிகை அம்மன் கையில் நாற்றுகள் வைக்கப்பட்ட பின்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. பின்னர் மங்கள இசையுடன் மாணிக்கவண்ணர் சுவாமியுடன் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்து கிராம எல்லையான ஈசான மூலையில் உள்ள விவசாய நிலத்தில் எழுந்தருளினர்.

பின்னர், இறைவன், இறைவியாக வேடம் தரித்த குழந்தைகள், வயலில் இறங்கிய பின்பு பூஜிக்கப்பட்ட புனிதநீர் வயலில் ஊற்றப்பட்டது. இதைதொடர்ந்து இறைவன், இறைவியாக வேடம் தரித்த சிறுவன், சிறுமி வயலில் நட்டு நடவு திருவிழா நடந்தது.விழாவில் பங்கேற்றோர், வயலில் நாற்றுகளை நட்டு இறைவனை, இறைவியை வணங்கினர். இதைதொடர்ந்து கோயிலில் இறைவனை காணாது தேடிவந்த சுந்தரர், நட்டது போதும், கரை ஏறி வாருங்கள் என பதிகம் பாடி வேண்ட இறைவன் இறைவியுடன் கரை ஏறிய நிகழ்வு நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories: