திருச்சுழி அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது:வனத்துறையிடம் ஒப்படைப்பு

திருச்சுழி: திருச்சுழி அருகே சிக்கிய அரிய வகை பச்சோந்தியை, கிராம மக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தமிழ்பாடி கிராமத்தில் அரிய வகை பச்சோந்தி நடமாடிக் கொண்டிருந்தது. இது அடிக்கடி நிறம் மாற்றுவதை சிறுவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்த சிலர், பச்சோந்தியை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வன உயிரின ஆர்வலர் ஜக்காரியா கூறுகையில், ‘‘தற்போது பிடிபட்டுள்ள பச்சோந்தி அரிய வகையைச் சேர்ந்தது. 400 கிராம் எடையுள்ளது. மஞ்சள், பச்சை, பழுப்பு நிறம் என அவ்வப்போது தன்னை நிறம் மாற்றிக் கொள்ளும். சாதாரண வனவிலங்குகள் தங்களது கண்களை இடது, வலது என ஒரே பக்கமாக திரும்பி பார்க்கும். ஆனால், இந்த பச்சோந்தி ஒரே நேரத்தில் 360 டிகிரி கோணத்தில் கண்களைச் சுழற்றும்.

இதேபோல, இருந்த இடத்திலிருந்து ஒரு அடி தூரத்தில் உள்ள சிறு பூச்சிகளை தனது நாக்கால் இழுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் விழுங்கி விடும். இவ்வகையான பச்சோந்தி ஆற்று ஓரங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் காணப்படும். இந்த வகையான பச்சோந்தி பாதுகாக்கப்பட வேண்டும்’’ என்றார்.

Related Stories: