அடிப்பாலாறு பகுதியில் அத்துமீறல்; தமிழக மீனவர்களை தாக்கிய கர்நாடக வனத்துறையினர்

மேட்டூர்: மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில் அத்துமீறி நுழைந்த கர்நாடக வனத்துறையினர், மீனவர்களிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வலைகளை பறித்துச் சென்றதோடு, 2 பேரை சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, இருமாநில எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் நீர்த்தேக்க பகுதியில், தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர், மீன்வளத்துறையில் முறைப்படி உரிமம் பெற்று, மீன் பிடித்து வருகின்றனர். தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில், ஏராளமான மீனவர்கள் 85 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம் அமைத்து மீன் பிடித்து வருகின்றனர். தமிழக வன எல்லையில், மேட்டூர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மீனவர்களின் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருப்பதாலும், மீன் பிடிக்க தடை இருப்பதாலும், நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில், மீனவர்கள் வலைவிரித்து மீன்களை பிடித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று கர்நாடக வனத்துறையினர், மேட்டூர் நீர்த்தேக்கத்தில் அத்துமீறி பரிசலில் நுழைந்து, தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தினர். மேலும், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வலைகளை அள்ளிச்சென்றனர். இதை தட்டிக்கேட்ட இரு மீனவர்களை, கர்நாடக வனத்துறையினர் அழைத்து சென்று சரமாரியாக தாக்கினர். பின்னர், அவர்களை மிரட்டி வெற்றுத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டு அனுப்பினர்.

Related Stories: