சென்னை- மஸ்கட் விமானத்தில் திடீர் கோளாறு: 144 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

சென்னை: சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் ஏர்இந்தியா விமானத்தில்  திடீரென இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. விமானியின் சாமர்த்தியத்தால் 144 பயணிகள் உயிர் தப்பினர். ஓமன் தலைநகர் மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அதில், 138 பயணிகள், 6 ஊழியர்கள் உட்பட 144 பேர் இருந்தனர். அப்போது, விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தபோது, விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பது தெரிந்தது. உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், விமான பொறியாளர் குழுவினர், விமானத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் அனைவரும் ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணியாகியும் விமானம் புறப்படவில்லை.

பின்னர், விமானம் பழுது பார்க்கப்பட்டு, பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏற்றப்பட்டு, நான்கரை மணி நேரம் தாமதமாக, நேற்று அதிகாலை 1 மணிக்கு மஸ்கட் புறப்பட்டுச் சென்றது.  உடனடியாக விமானத்தின் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக 144 பேர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: