கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு திருவையாறில் 100 ஏக்கர் வாழைகள் தண்ணீரில் மூழ்கியது: வேர் அழுகலால் பாதிக்கும் அபாயம்: விவசாயிகள் கவலை

திருவையாறு: கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவையாறு பகுதியில் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் எல்லாம் நிரம்பியுள்ளன. இதனால் உபரிநீர் தமிழகத்திற்கு அதிகஅளவு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து, அங்கிருந்து உபரிநீர் காவிரியில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தஞ்சை மாவட்டத்தில் கொள்ளிட கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் கொள்ளிடம் கரையோரம் இருக்கக்கூடிய சில கிராமங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமின்றி விளைநிலங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நெற்பயிர்கள், வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களுக்குள் உட்புகுந்த தண்ணீர் 5 நாட்களை கடந்தும் வடியாததால் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகளில் உள்ள ஆச்சனூர், மருவூர், வடுககுடி, சாத்தனூர் மற்றும் அய்யம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழை மரங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக வேர் அழுகல் நோய் ஏற்பட்டு வாழை பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 மேலும் ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாகவும், நெல்லுக்கு பயிர்க் காப்பீடு உள்ளதைபோல வாழைக்கும் பயிர்க் காப்பீடு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.   திருவையாறு பகுதியில் இருந்து சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு சாப்பாடு இலை, டிபன் இலைகள் அனுப்பி வைக்கப்படும். ஆனால் வாழை மரங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சென்னைக்கு இலைகள் அனுப்பும் பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும்  அய்யம்பட்டை, கூடலூர், பட்டுக்குடி போன்ற இடங்களில் உள்ள வாழைத் தோட்டம், கரும்பு மற்றும் வெண்டைக்காய் தோட்டம் போன்ற விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளன. மேலும் குடியிருப்பு பகுதிகள், செங்கல் சூளைகள், சாலைகள் போன்றவற்றை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

Related Stories: