போதைப் பொருள், துப்பாக்கி சூடு சம்பவம் எதிரொலி: 650 சிறார்களின் ஆடைகளை கழற்றி சோதனை: இங்கிலாந்து போலீஸ் மீது ஆணையம் புகார்..!

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த 3 ஆண்டில் 650 சிறார்களின் ஆடைகளை அகற்றி போலீசார் சோதனை நடத்தியதாக குழந்தைகள் நல ஆணையர் பரபரப்பு புகார் தெரிவித்தார். இங்கிலாந்து நாட்டின் குழந்தைகள் நல ஆணையர் ரேச்சல் டி சோசா, லண்டன் பெருநகரப் போலீசிடம் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரங்களின்படி, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்தாண்டு 15 வயது கறுப்பினப் பள்ளிச் சிறுமி ஒருவர் கஞ்சா வைத்திருந்ததாக கூறி அவரை பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர்கள் பள்ளிச் சிறுமியின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த சிறுமி மாதவிடாய் காலத்தில் இருந்தார். இருந்தும் பெண் போலீஸ் அதிகாரிகள் அவரிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளவில்லை. உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இவ்விவகாரத்தில் காவல் துறை மன்னிப்பு கேட்டது. நாட்டில் அதிகரித்து வரும் துப்பாக்கி சூடு சம்பவத்தின் எதிரொலியாக, சோதனை என்ற பெயரில் அத்துமீறல்கள் நடக்கின்றன. மொத்தத்தில் கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் 10 முதல் 17 வயதுடைய 650 சிறார்களின் ஆடைகளை கழற்றி நிர்வாணப்படுத்தி சோதனை நடத்தி உள்ளனர்.

இவர்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். மொத்த சிறுமிகளில் 58 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள். சிறுமிகளை சோதனை நடத்திய அதிகாரிகளில் பலர் பொருத்தமான வயது வந்தோராக இல்லை. சிறுமிகளிடம் இன ரீதியாக நடந்து கொண்ட ஏற்றத்தாழ்வு குறித்து மிகவும் கவலையடைகிறேன். புள்ளிவிவரங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. சோதனைக்கு உட்படுத்தப்படும் சிறுமிகளை சரியான முறையில் மற்றும் மரியாதையுடன் கையாளப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சட்ட வழிமுறைகளை ஏற்படுத்திட வேண்டும்’ என்றார்.

Related Stories: