திருச்சுழி அருகே கண்மாயில் 6 கற்சிலைகள் கண்டெடுப்பு

திருச்சுழி : திருச்சுழி அருகே, கண்மாயில் கிடந்த 6 கற்சிலைகளை அதிகாரிகள் மீட்டு தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, விடத்தக்குளத்தில் பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் நேற்று பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது, அவர்களது கால்களில் கற்கள் தென்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து சிலர் தண்ணீரில் மூழ்கி எடுத்து பார்த்தபோது, அவை கற்சிலைகள் என தெரிய வந்தது. இதுகுறித்து ஊர் பொதுமக்கள் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் வருவாய்த்துறையினர், விடத்தக்குளம் கண்மாயில் தேடியபோது சிதைந்த நிலையில் 3 அடி உயரத்தில் தலையில்லாத அம்மன் சிலை, 1.5 அடி உயரத்தில் கருப்பணசுவாமி சிலை, 1.5 அடி உயர அம்மன் சிலை, 2 அடி உயரத்தில் இரண்டு நாகர் சிலைகள் என மொத்தம் 6 கற்சிலைகளை கண்டெடுத்தனர். இவை அனைத்தும் திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார் தலைமையிலான வருவாய்த்துறையினர் சிலைகளை பார்வையிட்டனர். சிலைகள் அனைத்தும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அருங்காட்சியத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும் என திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

Related Stories: