போருக்கான முதல் கட்ட நடவடிக்கை? தைவான் மீது சீனா சைபர் தாக்குதல்; முக்கிய துறைகளின் கம்யூட்டர்கள் முடக்கம்: ஓட்டலில் ஏவுகணை விஞ்ஞானி மர்மச்சாவு

பீஜிங்: தைவான் மீது போரை தொடங்குவதற்கு முன்னோட்டமாக அந்நாட்டின் வெளியுறவு, ராணுவம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களில் மீது சீனா சைபர் தாகுதல்களை தொடங்கி உள்ளது. தைவானுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அதன் கடுமையான எதிர்ப்பையும் மீறி, அமெரிக்கா சபாநாயகர் நான்சி பெலோசி சில நாட்களுக்கு முன் தைவானுக்கு சென்றார். இதனால், கோபமடைந்துள்ள சீனா, தைவானுக்கு போர் பீதியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 3 நாட்களாக தைவான் ஜலசந்தியில் சீனாவின் முப்படைகளும் சுற்றிவளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 100க்கும் மேற்பட்ட போர் விமானங்கள், போர் கப்பல்கள் இதில் ஈடுபட்டுள்ளன. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் வீசப்படுகின்றன. தைவானுக்கு தைரியம் கொடுக்க, அமெரிக்க போர் கப்பல்களும் அப்பகுதிக்கு விரைந்துள்ளன.

 

தைவானின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சீன போர்க்கப்பல்களும், போர் விமானங்களும் தைவான் ஜலசந்தியின் எல்லை கோட்டைத் தாண்டி வருகின்றன. சீனாவின் போர் பயிற்சி, தைவான் மீதான தாக்குதலை தூண்டுவதாக உள்ளது’என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், கடற்கரை மாகாணமான கின்மென், லியு தீவு, பெய்டிங் தீவு ஆகியவற்றை சுற்றி பறந்த சீனாவின் டிரோன்கள் மீது  தைவான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.

இந்நிலையில், தைவானின்  வெளியுறவு, ராணுவ அமைச்சகங்கள் உட்பட, முக்கிய துறைகளின் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தி, கம்யூட்டர்களை முடக்கி இருக்கிறது. குறிப்பாக, வெளியுறவு அமைச்சகத்தின் மீதான சைபர் தாக்குதல்  கடந்த 2 நாட்களாக இருமடங்கு அதிகரித்துள்ளது. மேலும், தைவான் ஏவுகணை விஞ்ஞானியும்.  பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி, மேம்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவருமான ஓ யாங் லி-ஹ்சிங், ஓட்டலில் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டாலும், அவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. இந்த சம்பவங்கள், சீனாவின் போருக்கான முன்னோட்டமாகவே கருதப்படுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

Related Stories: