கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து நடைபயிற்சி சென்ற 4 பேர் கார் மோதி பலி-டிரைவரை கைது செய்து விசாரணை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சின்ன பர்கூரை சேர்ந்தவர் ஜெகதீசன்(38). இவர் கிருஷ்ணகிரி-சென்னை நெடுஞ்சாலையில் அங்கிநாயனப்பள்ளி மேல்கொட்டாய் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர்களான சின்னபர்கூர் சாலையை சேர்ந்த பாக்கியராஜ்(40), கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த சுஜித்குமார்(39), நேரு நகரை சேர்ந்த கண்டவீரவேல்(35) ஆகியோர், வழக்கமாக மாலை நேரத்தில் அங்கிநாயனப்பள்ளி சென்று, அங்கிருந்து நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

நேற்று மாலை 5.30 மணியளவில் அவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி தறிகெட்டு வேகமாக வந்த கார் ஒன்று, அவர்கள் மீது பயங்கரமாக மோதிவிட்டு, அருகிலுள்ள பள்ளத்தில் இறங்கி நின்றது. கார் மோதியதில், ஜெகதீசன் உள்பட 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில், பாக்கியராஜ், சுஜித்குமார் மற்றும் கண்டவீரவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார்கள்.

இதுகுறித்து தகவலறிந்த பர்கூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகதீசனை மீட்டு சிகிச்சைக்காகவும், மற்ற மூவரது சடலங்களை பிரேத பரிசோதனைக்காகவும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜெகதீசனும் இறந்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்தவர் ஓசூர் மூக்கண்டப்பள்ளியை சேர்ந்த தணிகைமலை (40) என்பது தெரிந்தது.

அவர் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்தவர்களை அழைத்து வர, வேலூரில் இருந்து சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடைபயிற்சி மேற்கொண்ட 4 பேர் கார் மோதி இறந்த சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: