கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு 3 கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது-வாழை, முருங்கை பயிர்கள் சேதம்

சிதம்பரம் : கர்நாடக மாநிலத்தில் பெய்த பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் உபரிநீராக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை அருகே உள்ள கீழணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 57 ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் இரு கரைகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

பழைய கொள்ளிடம் ஆறு மற்றும் புதிய கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே 3 தீவு கிராமங்கள் உள்ளன. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் உள்ளிட்ட 3  கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.இங்குள்ள சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வீடுகள் உள்ள தெருக்களில் தண்ணீர் ஓடுவதால் கிராம மக்கள் அவதி அடைந்துள்ளனர். இந்த 3 கிராமங்களிலும் புயல் பாதுகாப்பு மையங்களை அதிகாரிகள் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இதற்கிடையே கிராமத்தில் தண்ணீரில் எவரேனும் சிக்கிக் கொண்டால் அவர்களை மீட்பதற்கு வசதியாக தீயணைப்பு துறையினர் மற்றும் நீச்சல் வீரர்கள் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். சுகாதாரத் துறை சார்பில் கிராமத்தில் வெள்ள அபாய சிறப்பு மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கிராம பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள முருங்கை மற்றும் வாழை மரங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் இணைந்து இந்த கிராமங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: