மூணாறு அருகே நள்ளிரவில் தமிழக அரசு பஸ்சை மறித்து நொறுக்கியது காட்டு யானை: ரேஷன் கடையையும் சூறையாடியது

மூணாறு: மூணாறு அருகே பெரியகானல் பகுதியில் காட்டுயானை தாக்கியதில், தமிழக அரசு பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. ேகரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால், பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வரும் நிலையில் காட்டுயானையின் தொல்லையும் அதிகரித்து வருகிறது. மூணாறு அருகே பூப்பாறையை அடுத்த பெரியகானல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை சுற்றித்திரிகிறது. இந்த யானை, விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதுடன், அவ்வப்போது மூணாறு ரோட்டிலும் சுற்றித்திரிகிறது.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு, மூணாறிலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சை, பூப்பாறையை அடுத்த பெரியகானல் அருகே ரோட்டோரம் நின்றிந்த யானை மறித்தது. யானையை கண்டதும் டிரைவர் பிரேக் அடித்து பஸ்சை நிறுத்தினார். திடீரென பஸ்சின் அருகே ஓடி வந்த யானை, தும்பிக்கையால் பஸ்சை தாக்கியது. இதில், பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. பயணிகள் பயந்து கூச்சலிட்டதை தொடர்ந்து யானை வனத்தினுள் சென்றது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வனத்துறையினர் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இதேபோல், பூப்பாறையை அடுத்த சாந்தன்பாறை கிராம பஞ்சாயத்தில் ஆனையிறங்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடை மற்றும் அங்கன்வாடி மையத்தையும் காட்டுயானை அடித்து நொறுக்கியது. கடந்த 7 மாதங்களில் 4 முறை இங்குள்ள ரேஷன் கடையை யானை அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: