ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து 2 தென்மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை: அமைச்சர் நாசர் தொடங்கி வைத்தார்

ஆவடி: ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு அரசு பேருந்து சேவையை அமைச்சர் சா.மு.நாசர்  தொடங்கி வைத்தார். ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அரசு விரைவு பேருந்து சேவையைத் துவக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தனர். அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான சா.மு.நாசர் உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில், ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய 2 தென்மாவட்டங்களுக்கு முதன்முறையாக அரசு பேருந்து சேவை துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, 2 தென்மாவட்டங்களுக்காக அரசு பேருந்து சேவையை, மக்களின் பயன்பாட்டுக்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், அப்பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்கும் வகையில் ஓட்டுநர், நடத்துநருக்கு கைக்கடிகாரங்களை பரிசளித்து, அப்பேருந்தில் அமைச்சர் சா.மு.நாசர் பயணம் செய்தார். மேலும் பயணிகளை  பாதுகாப்புடன் குறிப் பிட்ட ஊர்களுக்கு அழைத்துச் செல்வதில் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

பின்னர் நிருபர்களிடம் சா.மு.நாசர் பேசுகையில், தன்னை பால் குடிக்கும் பூனை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அவர்தான் பால் குடித்து பழகியவர். அதே நினைவாக இருப்பவர். அப்படித்தான் மற்றவர்களையும் நினைத்து கொள்வார்.

ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து விரைவில் திருப்பதிக்கு அரசு பேருந்து சேவை துவக்கப்படும். மேலும், பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஆவடிக்கு விரைவு பேருந்து சேவை துவங்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

இதில் ஆவடி மாநகர மேயர் ஜி.உதயகுமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் வி.சிங்காரம், ஆவடி மாநகர செயலாளர் பேபி சேகர், மண்டல குழு உறுப்பினர்கள் ஜி.நாராயணபிரசாத், ராஜேந்திரன், விஜயன் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

Related Stories: