கூடலூர் அருகே உணவு தேடி குடியிருப்பை சூறையாடிய காட்டு யானை-சாதுர்யமாக உயிர் தப்பிய மூதாட்டி

கூடலூர் :  கூடலூரை அடுத்த தர்மகிரி பகுதியில் நள்ளிரவில் காட்டு யானை உணவு தேடி குடியிருப்பை சேதப்படுத்தியுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தர்மகிரி பகுதியியை சேர்ந்தவர் விவசாயி தேவசியா (எ) பேபி (70). இவர், தனது மனைவி ரோசம்மாளுடன் (62) அவரது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் இப்பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று இவரது வீட்டை நெருங்கி வருவதை பார்த்த தேவசியா பின்புற கதவு வழியாக வெளியே தப்பி ஓடி அருகில் உள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்க முயன்றார்.

அப்போது யானை, உணவு தேடி வீட்டின் முன்புற சுவற்றை இடித்து வீட்டின் 2 அறைகள் மற்றும் உணவு பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. வீட்டினுள் தனி அறையில் மாட்டிக் கொண்ட அவரது மனைவி ரோசம்மா சத்தம் போடாமல் அறையில் உள்ளே இருந்துள்ளார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள், யானையை விரட்டி இருவரையும் காப்பாற்றியதை அடுத்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். நேற்று காலை அங்கு வந்த வனக்குழுவினர் யானையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அட்டி  பகுதிக்குள் நேற்று நுழைந்த காட்டு யானை தமிழோவியன் என்பவரின் டீ கடையையும், பாண்டியார் டேன்டீ பகுதியில் ரவி என்பவரின் வீட்டையும் இடித்து சேதப்படுத்தியது. இது குறித்து அறிந்த நெல்லியாளம் நகராட்சி  கவுன்சிலர் புவனேஸ்வரி செல்வராஜ் மற்றும் தேவாலா வனத்துறையினர் சென்று  ஆய்வு செய்தனர். யானைகளிடமிருந்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: