தமிழகத்தில் தொடரும் கனமழை: 3வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தின் மேல் பகுதியிலும் நீடித்து வரும் வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மிக கன மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை, செங்கம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை, கடலூர், திண்டிவனம், உதகமண்டலம், கோவை, தேனி, ராஜாபாளையம், திருநெல்வேலி மாவட்டங்களில் நேற்று  மிககனமழை பெய்தது. இவை தவிர, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது.

இதன் காரணமாக கேரள- தமிழக எல்லையோர மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 8ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும். குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை முதல் கனமழை வரையும் பெய்யும். கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்து.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்றாம் நாளாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல வால்பாறை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: