மதுரை கோயில் திருவிழாவில் கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரல்

மதுரை: மதுரை கோயில் திருவிழாவில் கொதிக்கும் கூழ் அண்டாவில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் வீடியோ, சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, பழங்காநத்தம் மாடக்குளம் மெயின்ரோடு, கிழக்கு தெருவைச் சேரந்தவர் முத்துக்குமரன் (52). தனியார் நிறுவன ஊழியர். இவர், அப்பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் விழா கமிட்டியில் நிர்வாகியாக இருந்து வந்தார்.

கடந்த ஜூலை 29-ம் தேதி, ஆடி வெள்ளிக்கிழமை அன்று இக்கோயிலில் கூழ் காய்ச்சி ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் முன் 6 பெரிய அண்டாக்களில் கொதிக்க, கொதிக்க கூழ் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது, கூழ் காய்ச்சி ஊற்றும் பணிகளை பார்வையிட முத்துக்குமரன் கோயிலுக்கு வந்தார். கோயில் முன் வந்த வந்தவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதில் நிலைதடுமாறிய அவர், தட்டுத்தடுமாறி கூழ் வெந்து கொண்டிருந்த ஒரு அண்டாவில் சரிந்து விழுந்து விட்டார்.

உடனே அருகில் இருந்தவர்கள் பதறியடித்த படி ஓடிச்சென்று அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அண்டாவில் கூழ் கொதித்துக்ெகாண்டிருந்ததால் மீட்பதில் தாமதம் ஏற்பட்டது. ஒருவழியாக அண்டாவை கீழே தள்ளி சாய்த்து, அதில் இருந்து மீட்கப்பட்ட முத்துக்குமரன், உடனே மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார்.

இச்சம்பவத்தில் முத்துக்குமரனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. முத்துக்குமரன் கூழ் அண்டாவில் விழும் நிகழ்வு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இக்காட்சி சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவம் குறித்து முத்துக்குமரனின் மனைவி தமிழ்மணி, சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அந்தப்புகாரில், தனது கணவருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும், இதற்காக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: