பாண்டிய மன்னன் குடமுழுக்கு நடத்திய 11ம் நூற்றாண்டு சிவன் கோயிலில் ஆய்வு: தொல்பொருள் துறை ஆய்வு செய்ய கோரிக்கை

ராஜபாளையம்: ராஜபாளையம் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் குடமுழுக்கு நடத்திய, அருள்மிகு பறவை அன்னம் காத்தருளியசாமி கோயிலில், வரலாற்றுக் கள ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஏற்பாட்டின் பேரில் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு பறவை அன்னம் காத்தருளியசாமி கோயிலில், வரலாற்றுக் கள ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் கல்வெட்டில் பல உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். கிபி 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாக அந்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது உள்ள பறவை அன்னம், காத்திருந்த சுவாமி விக்ரகம் ஏற்கனவே உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தில் இருந்ததாகவும் தற்போது பாதுகாப்பு காரணம் கருதி, அந்த மண்டபத்திலிருந்து வேறொரு மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கன்னிமூல திசையில் இருந்த கணபதி தற்போது சிவன் உள்ள கருவறையில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், முருகன் சந்நிதியும் இதர சன்னதிகளும் பாழடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன.இந்த சன்னதிகளை தொல்பொருள் ஆராய்ச்சி துறை சார்பில் ஆய்வு செய்து உரிய ஏற்பாடுகள் செய்தால் பல உண்மைகள் தெரியவரும் எனவும் வரலாற்றுக் கள ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.வரலாற்று களஆராய்ச்சியாளர் சார்பில் டாக்டர் வெங்கடேஷ் மற்றும் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, சுகாதார ஆய்வாளர்கள் காளி, பழனி குரு உள்பட பலர் இதில் கலந்து கொண்டு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். மேலும், ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிவரும் என தெரிவிக்கின்றனர்.

Related Stories: