அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க தொழில்துறை அமைப்புகளுடன் அரசு ஆலோசனை நடத்தியதா? தயாநிதி மாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: நாட்டின் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க தொழில்துறை அமைப்புகளுடன் ஒன்றிய நிதி அமைச்சகம் ஏதேனும் ஆலோசனை மேற்கொண்டதா என திமுக எம்பி. தயாநிதி மாறன் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பினார்.

மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்விகளின் விவரம்:

* 2022 - 23ம் காலாண்டில் இந்தியாவின் புதிய முதலீட்டுக்கான திட்டங்கள் குறைந்துள்ளதாக ஊடகங்களில் வரும் செய்தி உண்மைதானா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

* உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்புகளுக்கான மூலதன முதலீட்டின் விவரங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை தெரியப்படுத்தவும்.

* புதிய முதலீடு பங்களிப்புக்கான சரிவின் காரணம் குறித்து ஒன்றிய அமைச்சகம் ஏதேனும் ஆய்வு மேற்கொண்டதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

* தொழில்துறை அமைப்புகள் மற்றும் தொழில் சார்ந்த பிரதிநிதிகள் இடையே அமைச்சகம் ஏதேனும் ஆலோசனை மேற்கொண்டதா? அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.

* முதலீடுகள் குறைந்துள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டத் துறைகளின் விவரங்கள் மற்றும் அப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒன்றிய அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

இவ்வாறு தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

* 2021-22ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் பதிவு செய்யப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 22,037 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது கடந்த 2020-21 காலாண்டில் பதிவான அந்நிய நேரடி முதலீட்டை விட மிகவும் அதிகமாகும் (13,438 மில்லியன் அமெரிக்க டாலர்கள்).

* கடந்த 2019-20, 2020-21, 2021-22 நிதி ஆண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டின் (2022-  2023: மே 2022 வரை) உற்பத்தி, கட்டுமான (உட்கட்டமைப்பு) நடவடிக்கை போன்ற துறைகளின் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு வரவு 2,39,936 மில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது.

* இதில் உற்பத்தி துறையில் 54,849.78 மில்லியன் அமெரிக்க டாலர்கள், கட்டுமான (உட்கட்டமைப்பு) துறையில் 13,521.60 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

* கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் மூலதன முதலீட்டை அதிகரிக்க அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, மூலதன முதலீட்டை ஈர்ப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்கியுள்ளது. இவ்வாறு பதில் அளித்தார்.

Related Stories: