பாவூர்சத்திரம் ரயில்நிலையத்தின் 119ம் ஆண்டு விழா கொண்டாட்டம்; ‘தாமிரபரணி’ பெயரில் தென்காசி - தாம்பரம் தினசரி ரயில்: தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு கோரிக்கை

பாவூர்சத்திரம்: ‘தாமிரபரணி’ பெயரில் தென்காசி முதல் தாம்பரம் வரை தினசரி ரயில் இயக்க ேவண்டும் என்று தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு கோரிக்கை விடுத்துள்ளது. நெல்லையில் இருந்து செங்கோட்டை வரை 1903ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீட்டர் கேஜ் வழித்தடம் தொடங்கப்பட்டு 1904ல் இந்த வழித்தடத்தில் கொல்லத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது, நிலக்கரி இன்ஜின் மூலமாக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில் நெல்லை - தென்காசி - கொல்லம் வழித்தடமானது இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக செல்வதால் இந்த வழித்தடத்தில் ரயிலில் பயணிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்நிலையில் நெல்லை - தென்காசி மீட்டர் கேஜ் ரயில் வழித்தடம் கடந்த 2008 டிசம்பர் 31ம் தேதி அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக மூடப்பட்டது.

பின்னர், கடந்த 2012 செப்டம்பர் 21ம் தேதி மீட்டர் கேஜில் இருந்து அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந்த ரயில்வே வழித்தடத்தில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட 16 ரயில் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. தற்போது ரயில்வே மின்மயமாக்கல் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதால் விரைவில் மின்சார இன்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்படும்.

இந்நிலையில் பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் 119ம் ஆண்டு விழா கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. ரயில் ஓட்டுனர்கள், ரயில் நிலைய அதிகாரிகள் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சார்ந்த ராமச்சந்திரன், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், தொழிலதிபர் சேவியர் ராஜன், தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா உட்பட பலர் பங்கேற்றனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா கூறுகையில், ‘தென் மாவட்டங்களில் நெல்லை அனைத்து பராமரிப்பு வசதிகளையும் கொண்ட  மிகப்பெரிய ரயில் முனையமாக செயல்படுவதால், நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் தென்காசி வழியாக சென்னை, பெங்களூரு, கோவை ஆகிய இடங்களுக்கு தினசரி ரயில்கள் இயக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

119 ஆண்டுகள் வரலாற்று சிறப்பு மிக்க நெல்லை - தென்காசி வழித்தடத்தின் வழியாக தாமிரபரணி என்ற பெயரில் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக  தாம்பரம் வரை தினசரி ரயில் இயக்க கோரிக்கை விடுத்து வருகிறோம்.

தென்காசி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளான பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, ஆலங்குளம், கடையம், ஆழ்வார்க்குறிச்சி, பொட்டல்புதூர், முக்கூடல், அம்பை, கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரங்களை சார்ந்த லட்சகணக்கான மக்கள் சென்னை மற்றும் கோவையில் வசிக்கின்றனர். எனவே தென்காசி-நெல்லை, தென்காசி-கோவை ஆகிய 2 ரயில்களையும் உடனடியாக தொடர்ந்து இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்  கூறினார்.

Related Stories: