கூடுவாஞ்சேரி அருகே ரயில் மோதி நாதஸ்வர வித்வான் பரிதாப சாவு: நண்பர் படுகாயம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே நேற்றிரவு குடிபோதையில் தண்டவாளத்தை  கடந்த 2 பேர் மீது மின்சார ரயில் மோதியது. இதில் நாதஸ்வரம் வாசிப்பவர்களில் ஒருவர் பரிதாபமாக பலியானார். மற்றொருவர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே போளூரை சேர்ந்தவர்கள் கணேசன் (58), ஆறுமுகம் (56). இருவரும் நாதஸ்வர வித்வான்கள். கோயில் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் பகுதியில் நீஞ்சிலியம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா நடந்தது. இதில், கணேசனும், ஆறுமுகமும் நாதஸ்வரம் வாசிக்கும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் கணேசனும் ஆறுமுகமும் மது அருந்தினர். பின்னர் இரவு 10 மணியளவில் மீண்டும் மது அருந்துவதற்காக தைலாவரம் ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள டாஸ்மாக்கு கடைக்கு இருவரும் சென்றனர். அங்கு மது அருந்திவிட்டு, போதையில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.

அப்போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயில், இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக பலியானார். ஆறுமுகம், படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஆறுமுகத்தை மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். கணேசனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: