ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாரதிய ஜனதா அரசு: திருமாவளவன் தாக்கு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அளித்த பேட்டி: நாடாளுமன்றத்தில் ஆளும் பா.ஜ அரசு ஜனநாயகத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. 24 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். விலைவாசி உயர்வு குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.

கனியாமூர் சம்பவத்தில் மாணவி சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தில் உளவுத்துறை மற்றும் போலீஸ் துறை விழிப்பாக செயல்பட்டிருந்தால் கலவர சம்பங்கள் நடந்திருக்காது என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும். தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பு தொடர்பாக அரசின் கட்டுப்பாட்டில் தனி கண்காணிப்பு கொண்டு வர வேண்டும். அதற்கு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பிரதமரை அமர வைத்து தமிழர்களின் பாரம்பரியம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் பாடம் எடுத்து இருக்கிறார். என்எல்சி நிறுவனத்தில் பொறியாளர் தேர்வில் தமிழர் ஒருவர் கூட இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து மின்துறை அமைச்சர் விளக்கி இருக்கிறார். அந்த கருத்தை நியாயப்படுத்த முடியாது. சாதாரண, எளிய மக்களை பாதிக்காத வகையில் மின்கட்டணம் இருக்க வேண்டும். மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: