முழு கொள்ளளவை எட்டும் மஞ்சளாறு அணை: ஆற்றங்கரையோரம் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

தேனி: பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் கனமழையால் மஞ்சளாறு அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சிமலையில் கொடைக்கானல் அடிவாரத்தில் அமைந்துள்ளது மஞ்சளாறு அணை. இந்த அணை நீர் மூலம் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு நல்லமழை பெய்ததால் அணை நிரம்பியது. இந்த ஆண்டும் மழை பெய்து அணை நிரம்பும் என விவசாயிகள் காத்து இருந்தனர்.

இந்நிலையில் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் நேற்று இரவு 8.30 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மஞ்சளாரின் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணைக்கு வினாடிக்கு வரும் 217 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

தற்போது அணையில் 435.32 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: