சீனா அனுப்பிய ராக்கெட் பூஸ்டர் கடலில் விழுந்தது

பீஜிங்: விண்வெளியில் சொந்தமாக ஆய்வு நிலையத்தை அமைத்து வரும் சீனா, இதற்கு தேவையான ஆய்வுக்கூடம் உள்ளிட்ட பொருட்களை ‘லாங் மார்ச் 5பி’ ராக்கெட் மூலம் கடந்த வாரம் விண்வெளிக்கு அனுப்பியது. இது விண்வெளி மையத்தை வெற்றிகரமாக அடைந்தது. ஆனால், இந்த ராக்கெட்டின் 22 டன் எடையுள்ள பூஸ்டர் பாகம் பூமியை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதாக, அமெரிக்கா அதிர்ச்சி தகவல் வெளியிட்டது. இதனால், எது எந்த பகுதியில் விழுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

வழக்கமாக இதுபோன்ற பொருட்கள் புவி மண்டலத்தில் நுழையும் போதே எரிந்து சாம்பலாகி விடும். ஆனால், இந்த பூஸ்டர் பாகம் மிகப் பெரியதாக இருப்பதால், புவி மண்டலத்தில் நுழையும்போது எரிந்து சாம்பல் ஆகாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சீன ராக்கெட் பாகம் நேற்று முன்தினம் நள்ளிரவு பிலிப்பைன்சின் பாலவான் தீவு அருகே கடலில் விழுந்தது. அப்போது, அது மிக வேகமாக வந்து விழுந்தது, கடலில் பெரியளவில் கொந்தளிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதை சீனா உறுதிபடுத்தி உள்ளது. ஆனால், பிலிப்பைன்ஸ் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Related Stories: