மேலூர் அருகே பழமை மாறாமல் மண் பானையில் தீர்த்தம் சுமந்து வந்து கோயிலில் வழிபாடு: 500 கிடா வெட்டி ஊருக்கே கறி விருந்து

மேலூர்: மேலூர் அருகே பழமை மாறாமல் மண்பானையில் தீர்த்தம் எடுத்து சென்று கோயில் முன்பு ஒரே நேரத்தில் 560 குடும்ப உறுப்பினர்கள் பொங்கல் வைத்து ஊருக்கே கிடா கறி விருந்து படைக்கும் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.மேலூர் அருகே சூரக்குண்டில் உள்ளது கருப்புச்சாமி கோயில். இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மிக சிறப்பாக விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடை காரணமாக தள்ளி சென்ற திருவிழா, 7 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு நேற்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் கடந்த 800 வருடங்களாக இவ்விழா நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதத்தில் காவல் தெய்வங்களையும், தங்கள் முன்னேர்களையும் வேண்டி ஒரே வாரிசுகளாக இருக்கக்கூடிய 560 குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆடி களரி என்ற பெயரில் இவ்விழாவை நடத்தி வருகின்றனர். இயந்திரமயமான இந்த கால சூழ்நிலையில் அரசு, தனியார் நிறுவனங்களில் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள் எங்கு இருந்தாலும், இந்த விழாவிற்கு கட்டாயம் வர வேண்டும் என்பது இவர்களின் எழுதபடாத சட்டம்.

இத்திருவிழாவையொட்டி நேற்று பாரம்பரிய முறைப்படி கருப்புச்சாமி கோயிலில் இருந்து மண் பானைகளை பெண்கள் சுமந்தபடி 2 கிமீ தூரத்தில் உள்ள காளியம்மன் கோயில் அருகில் உள்ள தீர்த்தத்தை எடுத்துகொண்டு மீண்டும் கோயிலை அடைந்து அங்கு ஒரே நேரத் தில் விறகு அடுப்பில் பொங்கல் வைக்கப்பட்டது. பெண்கள் நடந்து வரும் போது, அவர்களால் பானையை சுமக்க முடியாமல் போனால், அவர்களின் கணவர்கள் அதை சுமந்து வரவேண்டும். ஆனால் ஆண்கள் கட்டாயம் மேல்சட்டை அணிய கூடாது. கோயிலுக்கு நேர்த்தி கடனாக செலுத்தப்பட்ட 500க்கும் மேற்பட்ட கிடாக்களை இரவில் வெட்டி மற்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இரவிலேயே பரிமாறப்பட்டது. இந்த கறி விருந்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்து உண்டனர்.

*ஆம்புலன்ஸ்க்கு வழி

தீர்த்தம் எடுக்க பெண்கள் நீண்ட வரிசையாக சென்ற போது, நடுவில் மதுரை- திருச்சி தேசிய நெஞ்சாலை குறுக்கிட்டது. இதனை தாண்டும் போது தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. அப்போது 108 ஆம்புலன்ஸ் ஒன்று குறுக்கில் வர, பெண்கள் வரிசையாக செல்வதை நிறுத்தி வாகனத்திற்கு வழிவிட்டு நின்றனர். மேலூர் போலீசார் போக்குவரத்தை சீர்செய்தபடி இருந்தனர்.

Related Stories: