இலங்கையில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அனைத்து கட்சி ஆட்சி ரணில் பேச்சுவார்த்தை: ஒரு வாரத்தில் முடிவு

கொழும்பு: இலங்கையில் அனைத்து கட்சி ஆட்சி அமைப்பதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து, மக்கள் புரட்சி வெடித்ததால், அதிபர் பதவியை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பி ஓடினார். புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ள ரணி்ல், நாட்டின் பொருளாதாரத்தை மீட்க அனைத்து கட்சியையும் உள்ளடக்கிய அமைச்சரவை அமைக்கப்படும் என கூறியிருந்தார்.

இதன்படி, முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திர கட்சியுடன் ரணில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்தில் முடிந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து முடிவு செய்யப்படும். முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜனா பாலவேகயா ரணில் அரசில் இணைய மறுத்து வருகிறது. எனினும், விரைவில் புதிய அமைச்சரவையை உருவாக்குவதில் ரணில் உறுதியாக உள்ளார்.

கைவிரித்தது உலக வங்கி

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடன் வழங்கக் கோரி, சர்வதேச நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளுடன் இலங்கை அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. சீனாவிடம் கடன் சீரமைப்பு திட்டம் பற்றி பேசுங்கள் என புதிய கடன் தராமல் சர்வதேச நிதியம் நழுவிய நிலையில், ‘போதுமான பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்கப்பட மாட்டாது’ என உலக வங்கியும் நேற்று கைவிரித்தது.

Related Stories: