சதுரகிரி கோயிலில் பலத்த மழை: வெள்ளத்தில் சிக்கி தவித்த 2 ஆயிரம் பக்தர்கள் மீட்பு

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் ஓடைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. வெள்ளத்தில் சிக்கித் தவித்த 2 ஆயிரம் பக்தர்கள் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர். மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். கோயில் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது.

இதனால் கோயிலுக்கு செல்லும் பாதைகளில் உள்ள ஓடைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. தாணிப்பாறை வழுக்குப்பாறை பகுதியிலும் வெள்ளம் ஓடியது. மாலையில் தரிசனம் முடிந்து கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் சங்கிலிப்பாறை, மாங்கேனி ஓடை உள்ளிட்ட இடங்களில் வந்த வெள்ளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 2 ஆயிரம் பக்தர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். பின்னர் கோயிலில் 3 ஆயிரம் பக்தர்களை பாதுகாப்பாக தங்க வைத்தனர். நேற்று காலை ஓடைகளில் தண்ணீர் குறைந்த பிறகு பக்தர்களை கீழே இறங்க அனுமதித்தனர்.

பெரிய பாறை உருண்டது

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலிருந்து தாணிப்பாறை அடிவாரத்துக்கு வரும் வழியில், காராம் பசுத்தடம் என்ற இடத்தில் பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இதில், வழியில் இருந்த 5 சிறிய பாறைகள் சிதறின. அப்போது பக்தர்கள் யாரும் வராததால் விபத்து ஏற்படவில்லை.

Related Stories: