விழுப்புரத்தில் ₹4.30 கோடியில் சிறுபாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி-விரைந்து முடிக்க ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் :  விழுப்புரத்தில் ரூ.4.30 கோடியில் சிறுபாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். விழுப்புரம் நகராட்சியில் நெடுஞ்சாலை துறையின் மூலம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியர் மோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஆட்சியர் கூறியதாவது, தற்போது மழைக்காலமாக உள்ளதால் பணியை விரைந்து முடிப்பதுடன், மேலும் இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.  

ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.30 கோடி மதிப்பில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது புதிய பேருந்து நிலையம் அருகே புதிய பாலம் கட்டப்படுகின்றன. அதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பணி முடிவுற்றவுடன் மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் சென்று விடுகின்ற வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்த ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா,  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: