தண்ணீரின்றி வறண்டுவரும் மானூர் பெரியகுளத்தில் வெயிலின் தாக்கத்தால் செத்து கரை ஒதுங்கும் மீன்கள்-சுகாதார சீர்கேடு அபாயம்

நெல்லை : நெல்லை அருகே தண்ணீரின்றி வறண்டு வரும் மானூர் பெரியகுளத்தில் வெயிலின் தாக்கத்தால்  மீன்கள் செத்து மிதப்பதோடு ஒரு சில மீன்கள் கரை ஒதுங்குகின்றன. இதனால் தண்ணீர் மாசுபட்டுள்ளதோடு துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

 நெல்லை மாவட்டத்தில் கால்வாய்வரத்து மற்றும் மானாவாரி என 2 ஆயிரத்து 518 குளங்கள் உள்ளது. இதில் வடக்கு விஜயநாராயணம் பெரிய குளத்துக்கு அடுத்தபடியாக மானூர் பெரியகுளம் உள்ளது. மானூர் பெரிய குளம் சுமார் 1120 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இக்குளத்தில் 190 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டதாகும்.

 இக்குளத்தின் மூலம் மானூர், மாவடி, எட்டாங்குளம், மதவக்குறிச்சி உள்பட 4பஞ்சாயத்து பகுதிகளில் நேரடியாக 5 ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. இக்குளத்திற்கு சிற்றாறு மானூர் தடுப்பணையில் இருந்து 33 கிமீ தொலைவுக்கு நீர்வரத்து கால் அமைக்கப்பட்டு 19 குளங்கள் நிரம்பி 20வது குளமான மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.

 கடைமடை குளமாக மானூர் பெரியகுளம் உள்ளதால் குளம் முழுமையாக நிரம்பாத நிலை காணப்படுகிறது. சிற்றாற்று பகுதியில் போதிய தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால் தற்போது மானூர் பெரிய குளத்தில் தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது.

 இக்குளத்தில் குத்தகை அடிப்படையில் கட்லா, மிருகால், கண்ணாடி கெண்டை மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மீன்கள் நல்ல வளர்ந்து எடையுள்ள மீன்களை பிடிக்கும் தருவாயில் குளத்தில் தண்ணீர் குறைந்து போனதால் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் சூடாவதாலும் மீன்கள் செத்து கரை ஒதுங்கி வருகிறது. இதனால் குளத்தின் கரையை சுற்றிலும் மீன்கள் மடிந்து தண்ணீர் மாசுபட்டு காணப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.

காரணம் என்ன?

இதுகுறித்து விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் முகமது இப்ராஹீம் கூறுகையில் ‘‘மானூர் பெரியகுளத்திற்கு சிற்றாற்றில் இருந்து தண்ணீர் வரத்து குறைந்து விட்டது. இதனால் குளத்தில் தண்ணீர் மட்டமும் குறைந்துள்ளது. இக்குளத்தில் கட்லா, மிருகால், ரோகு, கண்ணாடிகெண்டை, சில்வர் உள்ளிட்ட வகை மீன்கள் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு மீன்களும் 3 கிலோ முதல் 6 கிலோவரை எடை உள்ளது. தண்ணீர் குறைவதால் வெயிலின் தாக்கத்தால் குளத்தில் உள்ள தண்ணீர் சூடு ஏற்பட்டு மீன்கள் செத்துமடிந்து கரை மூழுவதும் ஒதுங்குகின்றன.

இதனை மீன்கள் செத்து மடிவது குறித்து மானூர் பஞ்சாயத்து நிர்வாகம் தரப்பில் குளத்தை பார்வையிடப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு போதுமான அளவு தண்ணீர் உள்ளது. சிற்றாற்றில் தொடர் தண்ணீர்வரத்து இல்லாததால் குளத்தில் நீர் மட்டம் குறைந்ததால் வெயிலின் தாக்கத்தால் மீன்கள் செத்து கரை ஒதுங்குகின்றன’’ என்றார்.

Related Stories: