காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் இன்று தொடக்கம்: சிந்து தலைமையில் இந்தியா

பர்மிங்காம்: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் இன்று தொடங்குகிறது. 1930ல் அறிமுகமாகி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில், இங்கிலாந்து ஆதிகத்தின் கீழ் இருந்த நாடுகள் பங்கேற்கின்றன. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 2018ல் நடந்த போட்டியில், ஆஸி. அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இன்று தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் மொத்தம் 72 நாடுகளை சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் களமிறங்குகின்றனர். 20 வகை விளையாட்டுகளில் 280 பிரிவுகளாக போட்டிகள் நடக்க உள்ளன. இந்தியா சார்பில் 217 பேர் 16 விளையாட்டுகளில் பங்கேற்று பதக்க வேட்டை நடத்த உள்ளனர். தொடக்க விழா அணிவகுப்பில், இந்திய குழுவினருக்கு பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து தேசியக் கொடி ஏந்தி தலைமையேற்கிறார். ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்) காயம் காரணமாக விலகியதால், அவருக்கு பதிலாக சிந்துவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கோல்டு கோஸ்ட் தொடரில் இந்தியா 66 பதக்கங்களுடன் (26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம்) 3வது இடம் பிடித்த நிலையில், இம்முறை அதிக பதக்கங்களை குவித்து சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: