மாணவிக்கு பாலியல் தொல்லை: பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சஸ்பெண்ட்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு பதிவாளராக இருந்தவர் வேதியியல் துறை பேராசிரியர் கோபி (45). சேலத்தை சேர்ந்த மாணவி ஒருவர், இவரது வழிகாட்டுதலின் கீழ் முனைவர் பட்ட ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். கடந்த 24ம் தேதி ஆராய்ச்சி சம்பந்தமாக பேச வேண்டும் என, மாணவியை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது குடியிருப்புக்கு கோபி அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். தகவலறிந்த மாணவியின் உறவினர்கள், கோபியை தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கருப்பூர் போலீசில் கோபி புகார் அளித்தார். அதேசமயம், மாணவியும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, கோபி மீது புகார் அளித்தார். இதனை விசாரித்த போலீசார், பதிவாளர் கோபி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், சேலம் அரசு மருத்துவமனையில் கோபிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நேற்று முன்தினம் இரவு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே கோபியை தற்காலிக பணிநீக்கம் செய்து துணைவேந்தர் ஜெகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: