72 நாடுகள், 5 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு காமன்வெல்த் போட்டி நாளை தொடக்கம்: பதக்கவேட்டை நடத்துமா இந்தியா ?

பர்மிங்காம்: 22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது.  வரும்  8ம் தேதி வரை தொடர் நடைபெற உள்ளது. இதில்  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.  இந்த போட்டிகளில் இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர். நாளை தொடக்க விழா நடக்கிறது. இதில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், நாடுகளின்அணிவகுப்பு நடக்கிறது. முதல் முறையாக காமன்வெல்த்தில் மகளிர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. எட்ஜ்பாஸ்டனில் கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.கூடைப்பந்து போட்டிகள் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறுகின்றன. நீச்சல் மற்றும் பாரா நீச்சல் போட்டிகளும் அதே நாட்களில் நடைபெறவுள்ளன. இதேபோல் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை பேட்மிண்டன்போட்டிகள் நடைபெறவுள்ளன.  

ஜிம்னாஸ்டிக்ஸ் ஜூலை 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோல் தடகளம் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெறவுள்ளது.  2002ம் ஆண்டிலிருந்து காமன்வெல்த்தில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு ஆடப்பட்டுவருகிறது. ஆனால் இந்த ஆண்டுதான் பாரா டேபிள் டென்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 8ம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. கடந்த 2018ம் ஆண்டு  ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என 66  பதக்கங்களை வென்றது. இந்தமுறை அதைவிட கூடுதல் பதக்கங்களை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி ஹாக்கி, பேட்மிண்டன், வில்வித்தை, பளுதூக்குதல், துப்பாக்கிசுடுதல் உள்ளிட்டபிரிவுகளில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது. இந்திய நேரப்படி நாளை இரவு 11.30 மணிக்கு தொடக்க விழா நடக்கிறது. அலெக்சாண்டர் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க விழாவில் சுமார் 30,000 பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.  பாப் இசைக்குழு டுரான் டுரான் மற்றும் பர்மிங்காமில் இருந்து பாடகர் இண்டிகோ மார்ஷல் ஆகியோர் இசைநிகழ்ச்சி நடத்துவார்கள். ராணி எலிசபெத்தின் மகன் இளவரசர் சார்லஸ் தொடக்க விழாவில் பங்கேற்றுபோட்டியைதொடங்கி வைக்கிறார்.

Related Stories: