நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது: மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி கருத்து.!

மதுரை: பிற மனிதனை பற்றி அக்கறையின்மையும், அதீதபேராசையும் நிறைந்துள்ள சூழலில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது. கொடைக்கானலில் பயணிகள் வனத்திற்குள் வீசிச்செல்லும் கழிவுகளால் அப்பகுதி மக்களை எப்படி குற்றம்சாட்ட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கொடைக்கானல் சீராடும்கானல் பகுதியில் உள்ள குப்பை கொட்டும் மையத்தை நிரந்தமாக மூடவோ, வேறு இடத்திற்கு மாற்றவோ கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜட்கா எனும் நிறுவனத்தின் சார்பில் அங்கு பணியாற்றும் அவிஜித் மைக்கேல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும் வனத்திற்குள் வீசிச் செல்லும் போது, அப்பகுதி மக்களை மட்டும் எப்படி குற்றம் சாட்ட முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் சுத்தத்தை பெருமையாக பேசும் நம் மக்கள் தெருவில் குப்பைகளை போடவும், எச்சில் துப்பவும் யோசிப்பதில்லை என தெரிவித்தனர்.

மேலும் பிற மனிதனைப் பற்றிய அக்கறை இன்மையும், அதீத பேராசையும் நிறைந்து இருக்கும் சூழலில், நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்து ஒரே இரவில் அனைத்தையும் மாற்றிவிட இயலாது என அவர்கள் கருத்து தெரிவித்தனர். பின்னர் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில வனத்துறை செயலர்கள், நகர திட்டமிடல் இயக்குநர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், வன அலுவலர், கொடைக்கானல் நகராட்சித் தலைவர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: