வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ப்பு: நகர்ப்புற ஊரமைப்பு அதிகாரிக்கு சொந்தமான வீடு, திருமண மண்டபம் உள்பட 6 இடங்களில் விஜிலென்ஸ் ரெய்டு

அரியலூர்: புதுக்கோட்டையில் நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குனரான பணிபுரியும் தன்ராஜ்(58) என்பவரின் வீடு, திருமண மண்டபம் உள்பட 6 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். அரியலூர், பெரம்பலூரில் இந்த சோதனை நடந்து வருகிறது. அரியலூர் முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ். புதுக்கோட்டையில் நகர்ப்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வாணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் டாக்டராகவும், மற்றொருவர் இன்ஜினியராகவும் உள்ளனர். தன்ராஜ் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன்ராஜ் மீது பல்வேறு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து அரியலூரில் உள்ள தன்ராஜ் வீட்டுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 3 கார்களில் 10 போலீசார் இன்று காலை 7 மணிக்கு சென்றனர்.  வீட்டை உள்பக்கமாக பூட்டி விட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் அரியலூரில் உள்ள தன்ராஜிக்கு சொந்தமான ஸ்கேன் சென்டர், திருமண மண்டபம், வீடுகள் என 6 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டில் உள்ள தன்ராஜிக்கு சொந்தமான வாணி ஸ்கேன் சென்டரில் 3 அதிகாரிகள்,  திருச்சி மெயின் ரோட்டில் உள்ள வாணி திருமண மண்டபத்தில் 4 அதிகாரிகள் ேசாதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் அரியலூர் ஓடக்கார தெருவில் உள்ள தன்ராஜின் மற்றொரு வீடு, பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள அவரது  மற்ற 2 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் 6 இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 6 இடங்களிலும் 25க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை டி‌எஸ்‌பி சந்திரசேகரிடம் கேட்டபோது, தன்ராஜ் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தகவல் வந்தது. அதன்பேரில் தன்ராஜின் வீடுகள் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறோம் என்றார்.

Related Stories: